சென்னை : தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி குறித்த பயமின்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
இந்தியாவில் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் அவசியத்தை பொது மக்கள் உணர வேண்டும். தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். பிரேசில், வங்கதேசம், ஆப்ரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்க இருக்கிறது.
தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நான் நேரில் சென்று பார்த்துள்ளேன். தடுப்பூசிகள் பாதுகாப்பானது தான் என்பதை உறுதியாக கூறுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.