முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இரண்டு நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு 7.30 மணி அளவில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உயர்அதிகாரிகள் சென்றுள்ளனர். டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 7.30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் சென்றுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை உறுதிசெய்து அ.தி.மு.க. தலைவர்கள் இருவரும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த நிலையில்தான் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரெயில் இணைப்பு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த தொடக்க விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக கரூர்-புதுக்கோட்டை இடையே 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் தோண்டும் பணி நடைபெற உள்ளது. இதனை தொடங்கி வைக்கவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி 1000 மெகாவாட் சூரிய வெப்ப மின்சார திட்டத்தை தொடங்கி வைக்கவும் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.

கங்கை நதியை சுத்தப்படுத்தியது போல காவிரி நதியையும் சுத்தப்படுத்தி கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. நடந்தாய்வாழி காவிரி என்கிற திட்டத்துக்கும் நிதி உதவியையும் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோருகிறார்.

இந்த அரசு முறை சந்திப்புகள் முடிந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேசவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து