மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      தமிழகம்
Sellur-Raju 2020 12 12

Source: provided

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், அம்ரூட் திட்டப் பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகள் குறித்து மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை  அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:- 

மதுரை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையினால் சேதமடைந்த சாலைகளை வார்டு வாரியாக உடனடியாக சரி செய்ய வேண்டும். பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலை வசதி, பாதாள சாக்கடை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். சாலையோரங்களில் சேரும் குப்பைகளை காலதாமதமின்றி அகற்ற வேண்டும்.

மதுரை மாநகரை சுத்தமாக பராமரிக்க களப்பணியாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். பொறியாளர்களும், சுகாதார ஆய்வாளர்களும் தங்களது வார்டு பகுதிகளில் தினந்தோறும் நேரில் சென்று குறைகளையும், பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களையும் உடனடியாக சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பழுது சரி செய்வதற்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிசெய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளிலும் விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் குறித்து வரும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரி செய்ய வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைவுப்படுத்தி பிப்ரவரி மாதத்திற்குள்பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மயானங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொண்டு சுத்தமாக, சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். அம்மா மினி கிளினிக்குகளில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய நேரத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அம்ரூட் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாரிலிருந்து குடிநீர் கொண்டு வரும் பணியினை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மதுரை மாநகராட்சி பணியாளர்கள் எந்த பணியினையும் காலதாமதம் இன்றி விரைவில் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக  மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், சாலை பராமரிப்பு பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகள் குறித்தும், குறைகள் குறித்தும் வார்டு வாரியாக பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். அறிஞர் அண்ணா மாளிகை மைய அலுவலகத்தில் செயல்படும்   

24 மணி நேர ஒருங்கிணைப்பு மைய கட்டுப்பாட்டு அறையில் செயல்பாடுகளை பார்வையிட்டு இதுவரை பெறப்பட்ட புகார்களையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வுக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் அரசு, துணை ஆணையாளர் (பொ) ராஜேந்திரன், நகர்நல அலுவலர் மரு.குமரகுருபரன், உதவி ஆணையாளர்கள் பிரேம்குமார், சேகர், ரவிச்சந்திரன், மணியன், உதவி ஆணையாளர் (வருவாய்) ஜெயராமராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து