முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை நாங்கள் மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம் - முதல்வர் எடப்பாடி பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோவை - தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம் என்று கோவையில் நடந்த பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

கோவை பீளமேடு ரொட்டி கடை மைதானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த ஆண்டு இந்தியாவிலேயே பெண்கள் வாழ பாதுகாப்பான நகரம் என்று மத்திய அரசு கோவை மாநகரத்தை தேர்வு செய்து அறிவித்தது.  கோவை மாவட்டம் தொழில் வளம் நிறைந்த மாவட்டம். எனவே இந்த மாவட்டத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரத்தையும் நாங்கள் வழங்கி வருகிறோம். கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் தி.மு.க ஆட்சியின் போது ஏற்பட்ட கடும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக பல தொழிலாளர்கள் வேலை இழந்தனர். பொருளா தாரத்திலும் பின்னடைவு ஏற்பட்டது. அதனை எல்லாம் மாற்றி நாங்கள் மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம். மின் மிகை மாநிலமாக இருப்பதால் பல புதிய தொழில்கள் தமிழகத்தை தேடி வருகின்றன. இப்படி சட்டம் ஒழுங்கு மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதில் சிறந்து விளங்கும் நிர்வாக திறமைமிக்க அரசாக எங்களது அரசு உள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதல்வராக  பொறுப்பேற்றபோது 100-க்கு 32 பேர் தான் படித்து கொண்டிருந்தனர். தற்போது கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சி, அதிகளவில் கல்லூரிகள் திறந்ததன் விளைவாக உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 100-க்கு 49 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.  

நீர் என்பது முக்கியமானதாகும். நான் முதல்வராக  பதவியேற்ற போது கடுமையான வறட்சி. அப்போது கொடிய பிரச்சினை ஏற்பட்டது. அப்படிப்பட்ட பிரச்சினை இனி வரக்கூடாது என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். அந்த திட்டத்தின் மூலம் ஏரி, குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரினோம். மழையின் போது பெய்கின்ற தண்ணீர் அனைத்தும் குளங்கள், குட்டைகளில் தேக்கி வைக்கப்பட்டு, இனி அப்படியொரு சூழ்நிலை ஏற்படாத வண்ணம் பார்த்து கொண்டுள்ளோம்.  எண்ணற்ற பல திட்டங்களை கோவைக்கு நாங்கள் கொடுத்துள்ளோம். ஆனால் இங்குள்ள தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எங்களையும் பார்ப்பதில்லை. அமைச்சரையும் பார்ப்பதில்லை. மக்களையும் பார்ப்பதில்லை. மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்வதில்லை.

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திருஷ்டி மாதிரி சிங்காநல்லூரில் மட்டும் பல்வேறு தில்லுமுல்லுகள், பொய் வாக்குறுதிகள் கொடுத்து, அதன் மூலம் தி.மு.க வெற்றி பெற்றது. ஆனால் எந்தவித திட்டமும் இங்கு கிடைக்கவில்லை. எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவர் முதல்வரை பார்ப்பதில்லை. அமைச்சரையும் பார்ப்பதில்லை. மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களையும் எங்களிடம் கொடுப்பதில்லை. இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எந்தவித வேறுபாடும் பார்க்காமல் இந்த தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் எனது கவனத்திற்கு கொண்டு நிறைவேற்றி தந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். 

கோவை காளப்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க. குடும்ப கட்சி. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதற்கு தலைவர் ஸ்டாலின். டைரக்டர்கள் உதயநிதி, கனிமொழி. கடவுளே இல்லை என்றவர், வேலை பிடித்துள்ளார். அ.தி.மு.க.வை மக்கள் மதிக்கிறார்கள். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றார்கள். வேலை பிடித்த போதே, தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நாடகம் வெளுத்து போய் விட்டது.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து