தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை நடத்த மேலும் ஒருவாரம் அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2021      இந்தியா
Supreme Court 2020 12 01

தமிழகத்தில் காலியாக உள்ள 117 எம்.பி.பி.எஸ், 459 பி.டி.எஸ் இடங்கள் நிரப்பும் விதமாக மேலும் ஒரு வாரம் மருத்து கலந்தாய்வை நடத்த அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ கலந்தாய்வு தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தை பொருத்தமட்டில் மாநிலம் முழுவதும் மொத்தம் 34,424 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி ஜனவரி 15-ம் தேதி வரை இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு அறிவித்த 7.5சதவீத இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு, பொது பிரிவினர்கள், சிறப்பு பிரிவினர் என அனைவருக்கும் திட்டமிட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து கலந்தாய்வுக்கான காலக்கெடு என்பது தற்போது முடிவடைந்து இருந்தாலும், மாநிலம் முழுவதும் பல இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 

இதில் குறிப்பாக தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5 எம்.பி.பி.எஸ் இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 112 இடங்களும், அதே போன்று அரசு பல் மருத்துவ கல்லூரியில் 12 பி.டி.எஸ் இடங்களும், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 447 பி.டி.எஸ் இடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா கடந்த 21-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், மருத்துவ கலந்தாய்வுக்கான காலக்கெடு தற்போது முடிந்து விட்டாலும், தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் அதனை சரி செய்யும் விதமாக மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க தமிழகத்திற்கு மேலும் ஒரு வாரம் காலம் அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து மேற்கண்ட மனுவானது சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமண் தலைமையிலான அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் காலியாக இருக்கும் மருத்துவ இடங்களை நிரப்பும் விதமாக கலந்தாய்வை நடத்த இன்று(நேற்று) முதல் ஒரு வாரம் அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய உத்தரவை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள அவகாச நாட்களில் தமிழகத்தில் மீண்டும் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து