மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிறப்பு விசா திட்டம் உருவாக்க வேண்டும்: கொரோனா மேலாண்மை கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2021      உலகம்
modi 2020 11 03

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிறப்பு விசா திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கொரோனா மேலாண்மை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பிரதமர் மோடியின் ஆலோசனைகளுக்கு பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. 

கொரோனா மேலாண்மை: அனுபவம், நல்ல பழக்கங்கள் மற்றும் முன்னெடுப்பு நடவடிக்கை என்ற தலைப்பிலான கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  இந்த கூட்டத்தில், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், மொரீசியஸ், நேபாளம், பாகிஸ்தான், செசல்ஸ் மற்றும் இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகள் கலந்து கொண்டன.  ஒவ்வொரு நாட்டில் இருந்தும், சுகாதார செயலாளர் மற்றும் கொரோனா மேலாண்மைக்கான தொழில் நுட்ப குழு தலைவர் என ஒன் பிளஸ் ஒன் முறையில் இருவர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிறப்பு விசா திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.  இதனால், சுகாதார அவசரகால சூழலில், நமது மண்டலத்திற்குட்பட்ட தேவையான நாட்டின் வேண்டுகோளுக்கு ஏற்ப, உடனடியாக அவர்கள் பயணம் செய்து அந்நாட்டை அடைய முடியும் என கூறினார்.

நம்முடைய விமான போக்குவரத்து அமைச்சகங்கள், தற்செயலாக ஏற்பட கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான மண்டல ஏர் ஆம்புலன்ஸ் ஒப்பந்தத்தினை ஒருங்கிணைக்க முடியுமா? என்றும் அவர் கேட்டு கொண்டார். 

நமது மக்கள் தொகையில் கொரோனா தடுப்பூசிகளின் திறன் பற்றி ஆய்வு செய்வதற்கான ஒரு மண்டல தளத்தினை உருவாக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.  இதேபோன்று, வருங்காலத்தில் ஏற்பட கூடிய பெருந்தொற்றுகளை முன்பே தடுக்கும் வகையில், தொழில் நுட்பம் உதவியுடன் கூடிய, தொற்றியலை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மண்டல நெட்வொர்க்கை உருவாக்க முடியுமா? என்றும் அவர் கேட்டு கொண்டார். 

பிரதமர் மோடி முன்வைத்த ஆலோசனைகளுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரவு அளித்தன.  இந்த திட்ட ஆலோசனைகளை முன்னெடுத்து செல்லும் வகையில், மண்டல அளவிலான ஒத்துழைப்புக்காக கட்டமைக்கப்பட்ட விவாதம் ஒன்றும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகள் முன்மொழிந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து