சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று மாலையணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் அரும்பணியாற்றிய அம்மாவின் 73-வது பிறந்த நாளான 24.2.2021 - புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அம்மாவின் திருவுருவச் சிலைக்கு ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அ.தி.மு.க. கொடியினை ஏற்றிவைத்து, இனிப்பு வழங்குகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அம்மாவின் 73-வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிடுகின்றனர்.
அதனை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியின் உடன்பிறப்புகளுக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
ஆகவே தலைமை கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்ட செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் இன்று 24-ம் தேதி காலை 9 மணிக்கே தலைமை அலுவலகத்திற்கு வருகை தருமாறு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்ட செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கட்சியின் உடன்பிறப்புகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவரும் தத்தமது பகுதிகளில், கண் தானம், ரத்ததானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.