தி.மு.க. கூட்டணியில் இ.யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 1 மார்ச் 2021      தமிழகம்
DMK-2021-02-23

Source: provided

சென்னை : தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

முன்னதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், நேற்று(திங்கள்கிழமை) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேச்சுவார்த்தைக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் காதர் மொய்தீன் பேட்டியளித்தது:

தி.மு.க. தொகுதிப் பங்கீட்டில் முதல் கையெழுத்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் போடப்பட்டுள்ளது. இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  கேரளத்தில் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

அதுபோல மேற்கு வங்கம் மற்றும் அசாமிலும் போட்டியிடுகிறோம். நாடு முழுவதும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவதால் தமிழகத்திலும் தனி சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம். எனவே, அதுகுறித்த பிரச்னைகள் எழவில்லை. எந்தெந்தத் தொகுதிகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்

இதேபோல் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இரண்டு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற நிலையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்தது: "தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும், எந்ததெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் பின்னர் முடிவு செய்யப்படும். இதுபற்றிய தகவல்கள் ஓரிரு நாள்களில் வெளியாகும்." 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து