தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      தமிழகம்
education-depart-2021-04-04

தமிழகத்தில் திட்டமிட்டபடி 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வினை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, தினமும் 4000-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது. சென்னையில் தினமும் 1500 என்கிற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா பரவல் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து  தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கொரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், சில கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வினை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்த பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழலில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து