முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக 29 நட்சத்திர ஓட்டல்கள்

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மகாராஷ்டிரா : மும்பையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தாஜ் பேலஸ் உள்பட 29 பைவ் ஸ்டார் ஓட்டல்கள் என 244 ஓட்டல்களை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்களாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மும்பையில் கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் மும்பையில் மட்டும் 9,989 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 58 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் எப்போதும் இல்லாத அளவுக்கு 63,294 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 34,008 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தற்காலிக மருத்துவமனைகளை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கி வருகிறது. அப்படியும் போதிய அளவுக்கு படுக்கை வசதி இல்லாமல் இருக்கிறது. இதையடுத்து நிலைமையை சமாளிக்க, மாநகராட்சி நிர்வாகம் மும்பையில் உள்ள 244 ஓட்டல்களை கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தும் மையங்களாக அறிவித்துள்ளது.

இதில் 29 பைஃவ் ஸ்டார் ஹோட்டல்களும் அடங்கும். 34 நான்கு நட்சத்திர ஹோட்டல்களும், 56 மூன்று நட்சத்திர ஹோட்டல்களும், 38 இரண்டு நட்சத்திர ஹோட்டல்களும், 86 பட்ஜெட் ஹோட்டல்களும், ஒரு ஏர்போர்ட் ஹோட்டலும் இதில் அடங்கும். மும்பையில் பிரபலமான தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் இந்த ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர்.

கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பாத பட்சத்தில் அவர்களையும் இந்த ஹோட்டல்களுக்கு மாற்ற இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஓட்டல்களில் தங்குவதற்கான கட்டணத்தை வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளும், கொரோனா நோயாளிகளும் கொடுக்கவேண்டும்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க சராசரியாக 3,500 முதல் 4,500 வரையும், நான்கு நட்சத்திர ஓட்டல்களில் தங்க 2,500 ரூபாயில் இருந்து 4,000 ரூபாய் வரையும், மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்க 1,800 ரூபாயில் இருந்து 3,700 ரூபாயும், இரண்டு நட்சத்திர ஹோட்டலில் தங்க 1,700 லிருந்து 3,200 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து