முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா காலத்திலும் ஓய்வு இல்லை : அட்சய பாத்திரமாக மாறிய அம்மா உணவகம்

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா உணவகம் தொடர்ந்து 8 ஆண்டுகளாக ஏழைகள் மற்றும் கூலித் தொழிலாளிகளின் பசியை போக்கி வருகிறது.

அந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி 15 இடங்களில் ஜெயலலிதா, அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் பலர் அம்மா உணவகத்தை கேலி பேசினார்கள். மலிவு விலையில் வழங்கப்படும் உணவு எப்படி இருக்கும் என்று தெரியாதா? என்று கேள்வி எழுப்பினர். 

பின்னர் அதுபோன்று பேசியவர்களே அம்மா உணவகத்திற்கு சென்று சாப்பிடும் நிலை ஏற்பட்டது.

1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம், சப்பாத்தி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னையில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் பலருக்கு தினசரி சாப்பாடு அம்மா உணவகங்களில்தான்.

அதே நேரத்தில் அவசரம் அவசரமாக பள்ளிக்கூடங்களுக்கு சென்ற தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பலர் அம்மா உணவகத்தில் இட்லி வாங்கி கொடுத்து அனுப்பியதும் உண்டு.

இப்படி ஏழைகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் மட்டுமே பசியாற்றுவதற்கு சென்று வந்த அம்மா உணவகத்தின் அருமை கடந்த ஆண்டு கொரோனா காலத்தில்தான் பலருக்கு தெரிந்தது.

கொரோனா ஊரடங்கால் அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்ட நிலையில் அம்மா உணவகங்கள் மட்டுமே அப்போது பலருக்கு கைகொடுத்தது.

ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி பலரும் அம்மா உணவகத்துக்கு சென்று சாப்பிடும் நிலையை கடந்த ஆண்டு கொரோனா ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு வார்டுக்கு 2 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

200 வார்டுகளிலும் 400 அம்மா உணவகங்கள் 3 வேளையும் பசியாற்றி வருகிறது. கொரோனா காலத்தில் அம்மா உணவக ஊழியர்கள் பலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. இதுபோன்ற நேரங்களில் வைரஸ் தொற்று ஏற்பட்ட உணவகங்கள் மட்டுமே சில நாட்கள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் பொதுமக்கள் பணமின்றி திண்டாடியபோது இலவச உணவகமாகவும் அம்மா உணவகங்கள் மாறி இருந்தன. பலர் அம்மா உணவகங்களில் உணவு அளிக்க முன் வந்தனர்.

அவர்கள் மூலமாகவும் தினமும் உணவு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் முழுமையாக மூடப்படாமல் செயல்பட்ட ஒரே உணவகம், ‘அம்மா உணவகம்’ என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு ‘அட்சய பாத்திர’மாகவே மாறி மக்களின் பசியை அம்மா உணவகங்கள் போக்கின.

கொரோனா பரவல் அதிகரித்து கடந்த ஆண்டை போல ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால், அப்போதும் நிச்சயம் அம்மா உணவகங்கள் திறந்து இருக்கும். எப்போதும் போல மக்களின் பசியை போக்குவதில் அம்மா உணவகங்கள், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரங்களாகவே திகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து