முக்கிய செய்திகள்

வருமான வரி விவகாரம்; நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 17 ஆகஸ்ட் 2021      சினிமா
Surya 2021 08 17

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் விலக்கு கோரி சூர்யா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், 2007-2008ஆம் ஆண்டு மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011-ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பிலும், வருமான வரி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், 2007-08, 2008-09ஆம் ஆண்டுளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.

இந்நிலையில், தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்குச் சட்டப்படி மாதம் ஒரு சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி, 2018-ம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

தான் முறையாக வரி செலுத்தி வருவதாகவும், தீர்ப்பாய கால தாமதத்துக்கு வருமான வரித்துறையே காரணம் என்பதாலும், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற தனக்கு உரிமை உள்ளதாகவும் மனுவில் சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று  விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும், ஆனால், சூர்யா தாமதமாகத்தான் கணக்கைத் தாக்கல் செய்தார் எனவும், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், சோதனைக்குப் பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லையெனவும் வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது. வருமான வரித்துறையின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து