முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருவாய் இல்லாத அர்ச்சகர்கள் - பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 11 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

ஒருகாலப் பூஜைத்திட்டத்தின்கீழ் உள்ள 12,959  திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஒருகாலப் பூஜைத் திட்டத்தின்கீழ் உள்ள 12,959  திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் சந்தித்தப் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு  அதில் இருந்து அவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் மீட்டெடுக்கும் பொருட்டு துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாத வருவாயின்றிப் பணியாற்றி வந்த  அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களுடன் ரூ.4,000/-, உதவித்தொகை வழங்கப்பட்டது, இதன்மூலம் சுமார் 11,065 திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 6 இடங்களில் ரூபாய் 21 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள்,  பூசாரிகள் மாத வருவாயின்றிப் பணியாற்றி வந்தது தெரியவந்தது. அதன்படி கடந்த 4.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது  ஒருகாலப் பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000/- வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த அறிவிப்பினைச்  செயல்படுத்தும் விதமாகச் சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் நேற்று மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,

இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு ஆண்டு தோறும் 13 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும். இதைச் செலவு என்று நான் சொல்ல விரும்பவில்லை. இதன்மூலமாக ஏறத்தாழ 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறுகிறார்கள் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறோம்.

ஒருகால பூஜை நடக்கும் கோயில்களுக்கான வைப்பு நிதி 2 லட்சம் ரூபாயாக அதிகரித்தும் தரப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஒருகால பூஜை நடக்கும் கோயில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குப் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளின் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நான் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறேன் என்று கூறினார். 

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், இராமநாதபுரம் சமஸ்தானத்தின் பரம்பரைத் தர்மகர்த்தா ராணி ராஜராஜேஸ்வரி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து