பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கர்நாடக சட்டசபைக்கு மாட்டு வண்டிகளில் வந்த காங். தலைவர்கள்

Karnataka 2021 09 13

Source: provided

பெங்களூரு : கர்நாடக சட்டப்பேரவைக்கு மாட்டு வண்டிகளில் வந்த காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதா அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார், மேலவை தலைவர் எஸ்.ஆர்.பாட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் மாட்டு வண்டியில் சென்றனர். கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, வேலைவாய்ப்பின்மை நிலவுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மத்தியில் ஆளும் மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டியும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்தும் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்தராமையா, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் அரசை காரணம் காட்டுவது, சாரமற்ற வாதம். 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஆனால் தற்போது கலால்வரியாக ஒன்றிய அரசு 24 லட்சம் கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் எங்கே இருக்கிறது? 24 லட்சம் கோடி ரூபாய் எங்கே இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவை வளாகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 4 மாட்டுவண்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் சென்ற மாட்டுவண்டி மட்டும் அனுமதிக்கப்பட்டது.

ஆனால் சட்டப்பேரவை வளாகம் வரை மட்டுமே அனுமதித்த போலீசார், வளாகத்தின் உள்ளே மாட்டு வண்டிகளில் செல்ல அனுமதி இல்லை என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் வேறு வழியின்றி பேரவை வளாகத்திற்குள் மாட்டுவண்டியை போலீசார் அனுமதித்தனர். தங்கள் போராட்டம் தொடரும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் விதான் சௌதா வளாகம் அருகே 2 மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து