முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட முடிவு

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட முடிவெடுத்து அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமியிடம் அளித்தனர்.

புதுவை மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள கோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய எம்.பி.யைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் 15-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதி மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்.

இன்னும் 4 நாட்களே மனுத்தாக்கல் செய்ய காலம் உள்ளது. ஆனால், இதுவரை என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வில் தேர்தலில் போட்டியிடுவது யார்? என முடிவு செய்யப்படாமல் உள்ளது.

இரு கட்சிகளும் மாநிலங்களவை எம்.பி.யைப் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை மாநிலங்களவையில் கட்சியின் எண்ணிக்கையை உயர்த்த விரும்புகிறது. இந்த நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஹோட்டல் அக்கார்டில் நேற்று மதியம் நடந்தது.

மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், விவியன் ரிச்சர்ட், ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. கூட்டத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவியைக் கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கித் தரவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பா.ஜ.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் கூறுகையில் அகில இந்தியத் தலைமை அறிவுறுத்தல்படி வரும் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்துகிறது. இதில் கட்சித் தலைமை உறுதியாக உள்ளது. எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்து முதல்வரைச் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என்று குறிப்பிட்டார்.

 

அதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தந்தனர். அதை வாங்கிக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, படித்துப் பார்த்துவிட்டு புன்னகைத்தார். பதில் ஏதும் கூறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து