முக்கிய செய்திகள்

விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் செல்ல முயன்ற அகிலேஷ், பிரியங்கா காந்தி போலீசாரால் கைது

Akhilesh 2021 10 04

Source: provided

லக்னோ : விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பிரியங்கா காந்தியும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

உ.பி. மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பா.ஜ.கவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும் இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், விவசாயிகளை சந்திக்கும் பொருட்டு லக்கிம்பூர் சென்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் தடுத்தி நிறுத்தியதால் அவர் சாலையில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அகிலேஷ் யாதவை காவல்துறையினர் கைது செய்தனர். 

முன்னதாக லக்கிம்பூர் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டார். லக்கிம்பூர் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற  பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் இரவு விமானத்தில் லக்னோ சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் லக்கிம்பூர் மாவட்டம் சென்ற அவரை பன்வீர் கிராமத்திதின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே கைதான பிரியங்கா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சீத்தாப்பூரில் விருந்தினர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரியங்கா அங்குள்ள தரையை தானே பெருக்கி சுத்தம் செய்யும் விடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து