முக்கிய செய்திகள்

நியூசி.க்கு எதிரான டி-20 தொடர்: விராட் கோலி, பும்ரா, முகமது ‌ஷமிக்கு ஓய்வு?

Bumra-2021-10-15

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனியர் வீரர்கள்  விராட் கோலி, பும்ரா, முகமது ‌ஷமிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்று போட்டி...

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை முடிந்த பிறகே நியூசிலாந்து அணி இந்தியா வந்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டிகள் நவம்பர் 17, 19 மற்றும் 21-ந் தேதிகளில் ஜெய்ப்பூர், ராஞ்சி, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் நவம்பர் 25-29 வரை கான்பூரிலும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 3-7 மும்பையிலும் நடக்கிறது.

வீரர்களுக்கு ஓய்வு...

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் கேப்டன் விராட் கோலி, பும்ரா, முகமது ‌ஷமி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட், ஹர்‌ஷல் படேல், வெங்கடேஷ் அய்யர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

ராகுல் டிராவிட்...

 

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி காலம் 20 ஓவர் உலக கோப்பையுடன் முடிகிறது. இதனால் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கனவே இந்திய ஜூனியர், இந்திய ஏ அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமிக்கு தலைவராகவும் உள்ளார். இலங்கை சென்ற இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் சமீபத்தில் பயிற்சியாளர் பொறுப்பை வகித்தார்.நியூசிலாந்து தொடருக்கு பிறகு அவர் முழுநேர பயிற்சியாளராக நியமிக்கப்படலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து