முக்கிய செய்திகள்

பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து இன்று முதல்வர் ஆலோசனை: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      தமிழகம்
Meyyanathan1--2021-10-21

பட்டாசு வெடிப்பதற்கான நேரம் நிர்ணயம் செய்வது குறித்தும், குறும்படம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளதாக  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அன்றாட தேவைகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை சேமித்தால் சுமார் 1000 மெகா வாட் மின்சாரம் சேமிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதுத்தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்று நீர் மாசடைவதாக சென்னை ஐ.ஐ.டி குழு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம், கரூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் இயங்கி வரும் சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளில் இருந்து, கழிவு நீர் ஏதும் காவிரி மற்றும் அதன் உபநதிகளில் வெளியேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் 10 பேர் அடங்கிய 5 குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

அந்த குழு, நீர் நிலைகளில் சோதனை மேற்கொண்டு நீர் மாதிரிகளை சேமித்து அறிக்கை அளித்திருக்கிறது. விரைவில் குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பட்டாசு தயாரிப்பு குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை பின்பற்றி பட்டாசு வெடிப்பதற்கான நேரம் நிர்ணயம் செய்வது குறித்தும், குறும்படம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து