முக்கிய செய்திகள்

எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2-வது நாளாக போலீஸ் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      தமிழகம்
MR-Vijayabaskar 2021 10 26

Source: provided

சென்னை : வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாகவும், வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீதம் வரை சொத்து சேர்த்தது கண்டு பிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத ரூ.25 லட்சமும், தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இதன் அடிப்படையில் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை அலுவலகத்தில் கடந்த செப். 30-ந்தேதி ஆஜராக லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. இதையடுத்து மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை ஏற்று நேற்று முன் தினம் காலை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.

அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில் மீண்டும் ஆஜராக வேண்டும் என எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாகவும், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து