முக்கிய செய்திகள்

டெல்டாவை விட அதிவேகமாக பரவக் கூடியதா ஏஒய். 4.2 வைரஸ்? - ஆய்வாளர்கள் தொடர் கண்காணிப்பு

AY -4 2-Virus 2021 10 27

Source: provided

லண்டன் : உலகத்தையே கடந்த இரு ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மனித குலத்துக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கொரோனாவை அடக்கவும், அதனை கட்டுக்குள் கொண்டு வரவும் மருத்துவ வல்லுநர்கள் பல்வேறு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தாலும், குறிப்பிட்ட இடைவெளியில் வெவ்வேறு வடிவத்தில் கொரோனா வைரஸ் தலைதூக்குகிறது.

அந்த வகையில் கொரோனா வைரஸில் மிகவும் மோசமானதாகவும், மனித குலத்துக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது டெல்டா வகை வைரஸ்தான். இப்போது டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ளது ஏஒய்.4.2 வைரஸ்.

இந்த ஏஒய்.4.2 வைரஸ் பிரிட்டனில் கடந்த ஜூலை மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின் படிப்படியாக பிரிட்டனில் அதிகரித்து, பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏஒய்.4.2 வைரஸ் குறித்து தீவிரமாக பிரிட்டன் மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்யவும், அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும் தொடங்கியுள்ளனர்.

பிரிட்டனில் கொரோனா தொற்று குறைந்தது, பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திப் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விட்டார்கள் என்பதால், கட்டுப்பாடுகள் அனைத்தையும் பிரிட்டன் அரசு தளர்த்தியது. ஆனால், கடந்த சில நாட்களாக பிரிட்டனில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்கத் தொடங்கி, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பாதிக்கப்படுவோர் வயது வேறுபாடின்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

டெல்டா வகை வைரஸை விட அதிகமான பரவல் வேகம் கொண்டதா ஏஒய்.4.2 வைரஸ் என்ற கேள்விக்கு பிரிட்டன் சுகாதாரத்துறை அளித்த விளக்கத்தில், டெல்டா வகை வைரஸோடு ஒப்பிடுகையில் ஏஒய்.4.2 வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருப்பதாகக் கருதுகிறோம். ஆனால், உறுதி செய்யவில்லை. சில ஆதாரங்கள் கிடைத்திருந்தாலும் உறுதி செய்வதற்குப் பல ஆதாரங்கள் இன்னும் தேவைப்படுகிறது. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து உருமாற்றம் பெற்றதுள்ளதா என்பதை அறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

டெல்டா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் ஏஒய்.4.2 வைரஸ். டெல்டா வைரஸ் என்பது பி.1.617.2 என்று அழைக்கப்படுகிறது, 2020 அக்டோபரில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. ஏஒய்.4.2 வைரஸின் ஸ்பைக் புரதத்தில் ஏ222வி மற்றும் ஒய்145ஹெச். என இரண்டு வகையான உருமாற்றம் தென்படுவதாக கூறப்படுகிறது. 

பிரிட்டனில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 96 சதவீதம் பேருக்கும், டென்மார்க், ஜெர்மனியில் ஒரு சதவீதம் பேருக்கும் இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் பரவியுள்ளது.

பிரிட்டன் சுகாதாரத்துறையின் கூற்றுப்படி ஏஒய்.4.2 வைரஸ் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஆபத்து குறித்து முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், டெல்டா வைரஸ்களைவிட 15 சதவீத வேகத்துடன் பரவும் தன்மை கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த வகை வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்பாடு குறைவாகத்தான் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. ஏஒய்.4.2 வைரஸ் குறித்து அறிய பிரிட்டன் மருத்துவ வல்லுநர்கள், ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து