முக்கிய செய்திகள்

விரைவில் புதிய கட்சி தொடக்கம்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 117 இடங்களில் போட்டி: அமரீந்தர் சிங்

Amarinder-Singh 2021 10 27

Source: provided

சண்டிகர் : பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 117 இடங்களிலும் போட்டியிடப்போவதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், பஞ்சாப் மாநில முதல்வராகவும் இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கும் இடையே உருவான அதிகாரப் போட்டியின் காரணமாக முதல்வர் பதவியிலிருந்து கடந்த செப்.18 அன்று அமரீந்தர் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்த அமரீந்தர், புதிய கட்சி தொடங்கவாரா அல்லது பாஜகவில் இணைவாரா என்ற குழப்பம் நிலவியது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் பேசுகையில், பாதுகாப்பு பிரச்னை வைத்து என்னை கேலி செய்தார்கள். நான் அடிப்படையில் ஒரு ராணுவ வீரர். 10 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளேன். எனது பணிக்காலம் தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்து அடிப்படை விஷயங்களையும் நான் அறிவேன்.

மேலும், நான் 9 ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளேன். ஆனால், ஒரு மாதம் அமைச்சராக இருப்பவர்கள் என்னைவிட அதிகம் தெரியும் என கூறுகிறார்கள். குழப்பமான சூழலில் பஞ்சாப் இருப்பதை யாரும் விரும்பவில்லை. பஞ்சாபில் நாம் மிகவும் கடினமான காலத்தை கடந்து வந்திருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் புதிதாக கட்சி ஆரம்பிக்க போகிறேன். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும். சித்து எங்கு போட்டியிட்டாலும், அவருக்கு எதிராக போட்டியிடுவோம். சரியான நேரத்தில் 117 இடங்களிலும் தனியாகவோ அல்லது கூட்டணி வைத்தோ போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து