முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 3-வது நாளாக காற்று மாசு அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் நேற்று 3-வது நாளாக காற்று தர குறியீடு மோசமான கட்டத்தில் இருந்தது. 

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடித்ததன் மூலம் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஏற்கனவே வேளாண் அறுவடைக்கு பிறகு விவசாயிகள் கழிவுகளை எரித்து வரும் நிலையில் பட்டாசு புகை காரணமாக காற்று மாசு மிகவும் அதிகரித்தது.

தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்று மாசு குறையவில்லை. தொடர்ந்து அபாய கட்டத்தை தாண்டியே இருந்து வருகிறது. நகர் முழுவதும் புகைமூட்டம் நிலவுகிறது. பகல் வேளைகளிலேயே சாலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை உள்ளது.

டெல்லியில் நேற்று 3-வது நாளாக காற்று தர குறியீடு மோசமான கட்டத்தில் இருந்தது. நேற்று காலை டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 436 ஆக இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியை ஒட்டி உள்ள நொய்டா, குருகிராம், காசியாபாத், கிரேட்டர் நெய்டாவிலும் காற்று மாசு அதிகமாக இருந்தது.  தொடர் காற்று மாசு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.  பலருக்கு சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சல் ஏற்பட்டது.  அதே போல் டெல்லி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  காற்று மாசுவால் கொரோனா வைரஸ் எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். அதனால் பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காற்றின் தரத்தை பொறுத்தவரை தர குறியீடு 50 இருந்தால் நல்லது என்றும், 50 முதல் 100-குள் இருந்தால் திருப்திகரமானது என்றும், 101 முதல் 200-க்குள் இருந்தால் மிதமானது என்றும், 201-ல் இருந்து 300-க்குள் இருந்தால் மோசமானது என்றும் 301-ல் இருந்து 400-க்குள் இருந்தால் மிக மோசமாது என்றும், 401-ல் இருந்து 500-க்குள் இருந்தால் கடுமையானது என்றும் அளவிடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து