முக்கிய செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 'ராஜீவ் சர்மா' தலைமையிலான மத்தியக்குழு தமிழகம் வருகிறது

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      தமிழகம்
C M PHOTO-2021-11-18

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழு விரைவில் தமிழகம் வருகிறது.

தமிழகத்தில் தீபாவளிக்குப் பிறகு வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் தொடர் கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. டெல்டா பகுதிகளில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்தன. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தி.மு.க எம்பி டி.ஆர்.பாலு நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 25 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 12 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் சராசரி அளவை விட 52 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. மழையால் 49 ஆயிரத்து 757 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ.2079 கோடி வழங்க வேண்டும். மழை வெள்ள நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.550 கோடி வழங்க வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக விளை நிலங்கள் மற்றும் சாலைகள் போன்றவை வெகுவாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய வருகை தரவுள்ள மத்திய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் குழுவினர் உடனடியாக தமிழகம் வருகின்றனர். இந்த குழுவில் விவசாயம், உழவர் நலன், நிதி, நீர்வளம், மின்சாரம், சாலை போக்குவரத்து, ஊரக வளர்ச்சி ஆகிய 6 முக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய தினமே தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த குழுவிடம் உரிய விவரங்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குழுவினர் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்து ஒரு வாரத்தில் மத்திய உள்துறைக்கு அறிக்கை அளிப்பர். இந்த ஆய்வு முடிவில் கொடுக்கும் அறிக்கையைப் பொருத்துதான் தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி எவ்வளவு என்று நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து