முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு : அமைச்சர் எ.வ.வேலு தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த நெடுஞ்சாலைகளைத் தற்காலிகமாகச் சீரமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தாக்கத்தால் பாலாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு மாதனூர் மற்றும் விரிஞ்சிபுரம் தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், பொதுமக்களின் பிரதான சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தரைப்பாலங்களையும் உயர்மட்டப் பாலங்களாகக் கட்ட மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேதமடைந்த விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (நவ.30) காலை ஆய்வு செய்தார். சேதமடைந்த தரைப்பாலத்தைத் தற்காலிகமாகச் சீரமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெருமழை பெய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த மழை என ஒட்டுமொத்தமாகப் பாலாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. விரிஞ்சிபுரம் தரைப்பாலம் 322 மீட்டர் நீளம் கொண்டது. இதில், 80 மீட்டர் அளவுக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் சீரமைக்க முடியாது. தண்ணீர் அளவு குறைந்ததும் தற்காலிகமாகச் சீரமைக்கப்படும். பின்னர், ரூ.30 கோடி மதிப்பீட்டில் இங்கு உயர்மட்டப் பாலம் கட்டப்படும். தமிழ்நாட்டில் 1,281 தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், இந்த ஆண்டு மட்டும் 648 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை இன்னும் முடியாததால் சேத விவரங்களை முழுமையாகக் கணக்கிடவில்லை. மழை நின்ற பிறகு முழுமையாகக் கணக்கெடுக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 48 இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது. தற்காலிகச் சீரமைப்புப் பணிக்காக ரூ.200 கோடியை பேரிடர் வருவாய் மேலாண்மை நிதியில் இருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு முதல்வர் ஒதுக்கியுள்ளார். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளுடன் கூடிய உயர்மட்டப் பாலங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை என்பது நல்லதுதான். இதுகுறித்த ஆய்வு முதல்வரின் பார்வையில் இருக்கிறது. அது முழுமை பெறும்போது நாம் மகிழ்ச்சி அடையலாம். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!