முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நாள்: சென்னை நினைவிடத்தில் வரும் 5-ம் தேதி ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மலர்தூவி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின்  5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். மேலும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஜெயலலிதாவின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்த அ.தி.மு.க. அறிவுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மா, நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் டிசம்பர் 5.  காலத்தால் அழியாத புரட்சிகர திட்டங்களால் தமிழக மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய அவரது புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாமல் மக்களுக்காக அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்து பாடுபட்ட அம்மாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது கழகத்தினர் ஒவ்வொருவரின் இன்றையமையாத கடமையாகும்.

அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். 

இதில் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும். அம்மாவின் நினைவு நாளில் அவர் பற்றிய நினைவுகளை சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஆங்காங்கே அம்மாவின் திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். 

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும். மேலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகராஷ்டிரா, கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அம்மாவின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து