முக்கிய செய்திகள்

பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கூறுவதா? முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      அரசியல்
OPS 2021 07 12

பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கருத்துத் திணிப்பு என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கட்டணம் ரத்து, முதியோர் உதவித் தொகை உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் என தி.மு.க.வால் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?

வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்று மக்கள் காத்திருந்த நிலையில், மக்கள் எண்ணத்திற்கு முற்றிலும் மாறான வகையில், 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில், இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளது தமிழக மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டிலே பல நூற்றாண்டுக் காலமாக சித்திரை மாதப் பிறப்பு தான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது இந்த மரபினை சீர்குலைக்கும் விதமாக எவ்வித வலுவான ஆதாரமும் இல்லாமல், தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வழிவகை செய்யும் சட்டம் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

பண்டிகை என்பது இதுநாள் வரை கடைபிடித்து வந்த முறைப்படி, மரபுப்படி, கலாச்சாரத்தின்படி, பழக்கவழக்கத்தின்படி கொண்டாடப்படுவது. இதற்கு எதற்குச் சட்டம்? இதில் ஏன் அரசு தலையிடுகிறது? என்பதுதான் மக்களின் வாதமாக இருந்தது. எனவேதான், சட்டம் இயற்றப்பட்டும், தமிழக மக்கள் சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்.

கடந்த 2011-ம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு நீக்கச் சட்டமுன்வடிவை 23.08.2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி சட்டமாக்கினார். இந்தச் சட்டத்தின்படி, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

எந்தெந்த பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும், எப்பொழுது கொண்டாட வேண்டும் என்று முடிவு மக்களிடத்தில் தான் இருக்கிறது. அதை மக்கள் விருப்பப்படி விட்டுவிடுவது தான் நல்லது.   எனவே, தமிழக முதல்வர் மக்களின் உணர்ச்சிகளுக்கு, கருத்துகளுக்கு மதிப்பளித்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாச்சாரம் தொடர்ந்திடவும், தமிழக மக்களின் நம்பிக்கைக்கு எதிராக பொங்கள் பையில் இடம்பெற்றுள்ள வாசகத்தை நிறுத்திடவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து