முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க எம்.பி.க்களுக்கு கொலை மிரட்டல்: டிரம்ப் ஆதரவாளருக்கு 33 மாதம் சிறை தண்டனை

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

அமெரிக்க எம்.பி.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் டிரம்ப் ஆதரவாளருக்கு 33 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷயர் மாகாணத்தை சேர்ந்தவர் ரைடர் வினீகர் (வயது 34). இவர் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளர் என தெரிகிறது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து அவர் பின்னால் நிற்காவிட்டால் உங்களை தூக்கில் தொங்கவிட்டு விடுவேன் என்று அந்த நாட்டின் 6 எம்.பி.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக அவர் பேசி அதை பதிவு செய்து அந்த எம்.பி.க்களின் அலுவலகங்களில் கொண்டு போய் போட்டு விட்டார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் அமெரிக்க கேபிட்டல் போலீசார் வழக்கு பதிவு செய்து, வினீகரிடம் விசாரணை நடத்துவதற்காக அவர் வீடு தேடிச்சென்றனர். ஆனால் அவர்களிடம் வினீகர் பேச மறுத்து விட்டார். அத்துடன் அவர் மறுநாளே குடும்பத்துடன் பிரேசிலுக்கு சிட்டாய் பறந்து விட்டார். ஆனால் மறுமாதமே அவர் நாடு திரும்பிய போது போலீசாரிடம் அகப்பட்டுக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை அங்குள்ள கோர்ட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடந்தது. விசாரணையின்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு 33 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தும், 15 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.11 லட்சம்) அபராதம் விதித்தும் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அவர் அமெரிக்க மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!