முக்கிய செய்திகள்

குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து பல ஆய்வுகள் நடைபெற்று வருகிறது: பார்லி.யில் மத்திய அரசு விளக்கம்

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      தமிழகம்
Baby-vaccine 2021 12 08

18 -வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த அவர் கூறியுள்ளதாவது., 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அறிவியல் ஆதாரங்களை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான தேசிய நிபுணர் குழுவும், தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவும் ஆய்வு செய்து வருகிறது.

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு காடிலா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்த ஜைகோவ்-டி தடுப்பூசி, அவசர கால பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் ஒப்புதலை பெற்றுள்ளது. இது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைகளின் இடைக்கால தரவுகள் அடிப்படையிலானது.18வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோவிட்-19 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன.

2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசியின் 2வது மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை பாரத் பயோடெக் நிறுவனம் நடத்தி வருகிறது. அது இடைக்கால தரவுகளை தேசிய ஒழுங்குமுறை அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது. 2 முதல் 17 வயது உடையவர்களுக்கு கோவோவாக்ஸ் என்ற தடுப்பூசியின் 2வது மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையை இந்திய சீரம் மையம் நடத்துகிறது.

5 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆர்பிடி கரோனோ தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் 3ம் கட்ட பரிசோதனைகளை பயோலாஜிக்கல் இ நிறுவனம் நடத்துகிறது. 12 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு Ad.26COV.2S என்ற கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட கோவிட்-19 தடுப்பூசிகளின் அனுமதி மருத்துவ பரிசோதனைகளின் வெற்றிகர முடிவை பொருத்தது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து