முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் தரவரிசை: ஜோகோவிச், ஆஷ்லி முதலிடம்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 17-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களில் 32 பேருக்கு போட்டித்தரவரிசை வழங்கப்படுவது வழக்கம்.  இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச்சுக்கு (செர்பியா) முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. 

போட்டித்தரநிலையில் 2-வது இடத்தை டேனில் மெட்விடேவும் (ரஷியா), 3-வது இடத்தை அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி) பெற்றுள்ளனர். முன்னாள் சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-வது இடத்தில் இருக்கிறார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டிக்கு முதலிடமும், அரினா சபலென்காவுக்கு (பெலாரஸ்) 2-வது இடமும், கார்பின் முகுருஜாவுக்கு (ஸ்பெயின்) 3-வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது.

பல சாதனைகளை முறியடிப்பார்: ரபாடாவுக்கு 'நிதினி' புகழாரம்

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ரபாடா. இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியில் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர் 73 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். மயங்க் அகர்வால், ரகானே, பும்ரா, கேப்டன் விராட் கோலி ஆகியோரது விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இந்த தொடரில் ரபாடா இதுவரை 17 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்துள்ளார்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீரர் நிதினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது., ரபாடா வலிமையான பந்து வீச்சாளர். மிகவும் வேகமாக பந்துகளை வீசும் உடல் தகுதியை பெற்றுள்ளார். எல்லாவிதமான பந்துகளையும் வீசி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார். அவர் தற்போது 50 டெஸ்டில் 230 விக்கெட்டை தொட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது, அவரால் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டை கைப்பற்ற முடியும். இவ்வாறு நிதினி கூறியுள்ளார்.

ஜோகோவிச் பற்றி தரக்குறைவாக  பேசிய செய்தி வாசிப்பாளர்கள்

ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் முன்னணி செய்தியானது. அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு அவரது செய்தியை ஒளிப்பரப்பு செய்தனர். ஆஸ்திரேலியாவின் செவன் நியூஸ் சேனல் செய்தியாளர்கள் மைக் அம்ரோர்- ரெபேக்கா மாடர்ன் ஆகியோர் செய்தி வாசிக்க தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது மைக் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக என நினைத்து, ஜோகோவிச் குறித்து தரக்குறைவாக பேசினர். 

அவர் பொய் சொல்கிறார், மோசமான நபர். பொய் சொல்லி தப்பிக்க பார்க்கிறார் என திட்டி தீர்த்தனர். ஆனால் மைக் ஆன்-இல் இருந்ததால் அவர்கள் பேச்சு நேரடியாக ஒளிப்பரப்பானது. தரக்குறைவான பேச்சு வெளிப்படையாக ஒளிப்பரப்பு ஆனது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியுள்ளது.  இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்ய ஆஸி. அரசு முயற்சி

தடுப்பூசி செலுத்தாத ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க மருத்துவ ரீதியிலான விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதை ஜோகோவிச் ஆஸ்திரேலியா சென்றவுடன் தெரிவித்தார். ஆனால் இந்த வி‌ஷயத்தில் ஆஸ்திரேலியா தனது முடிவை மாற்றிகொண்டது. சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறி அவரது விசாவை ரத்து செய்தது. ஆஸ்திரேலியா வந்த அவர் மெல்போர்ன் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். ஆஸ்திரேலிய குடியேற்ற துறையின் தடுப்பு காவல் மையமாக செயல்படும் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜோகோவிச் மெல்போர்ன் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஜோகோவிச்சின் விசா ரத்து நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய கோர்ட்டு தடை விதித்தது. ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருப்பதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தாலும் அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அவரது விசாவை மீண்டும் ரத்து செய்ய ஆஸ்திரேலிய குடியுரிமை துறை மந்திரி தனது தனிப்பட்ட அதிகாரத்தை உபயோகிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அரசு தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.

கேப்டன் கோலிக்கு பேட்டிங் பயிற்சியாளர் ரத்தோர் புகழாரம்

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அளித்த பேட்டியில், விராட் கோலிபேட்டிங் செய்யும் விதத்தில் ஒருபோதும் கவலை இல்லை, அவர் நன்றாக பேட்டிங் செய்தார். ஒரு பேட்டிங் பயிற்சியாளராக, அவர் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்று நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. அவர் வலை பயிற்சி மற்றும் களத்தில் மிகவும் சிறப்பாக இருந்தார். 

நல்ல மாற்றம் என்னவென்றால், அவர் மிகவும் ஒழுக்கமாக இருந்தார். நான் அதை ஒப்புக்கொள்கிறேன், அவர் மிகவும் அழகாகவும் திடமாகவும் இருந்தார். ஒரு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார், கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால், இது பெரிய ஸ்கோராக இருந்திருக்கலாம். இன்று அவர் சில கவர் டிரைவ்களை விளையாடினார், அவர் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்தார். இங்கு விளையாடுவது சவாலான சூழ்நிலை, ரன்களை எடுப்பது எளிதானது அல்ல, ஆனால் இன்றும் நாங்கள் சமமாக இருக்கிறோம். குறைந்தபட்சம் 50-60 ரன் அதிகமாக எடுத்திருக்க வேண்டும், அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து