முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு : சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நேற்று விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

மதுரை பாலமேடு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.   போட்டி தொடங்கும் முன்பாக ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக பாலமேடு கிராம கமிட்டி மகாலிங்க சாமி கோவிலில் வழிபாடு மேற்கொண்டனர். 

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், காளையர்களுக்கு போக்குக் காட்டிய காளைகளுக்கும் கட்டில், பீரோ, தங்கக் காசு உள்ளிட்ட பலவகையான பொருட்கள் வழங்கப்பட்டது.  இதற்கிடையே 11.30 மணியளவில் வாடிவாசல் பின்பகுதியில் காளைகளை சட்டவிரோதமாக அவிழ்த்து விட முயன்ற நபர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில்  6 சுற்றுகளில் 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.180 மாடுபிடி வீரர்கள் பங்குபெற்றனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.  பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்கள் 2 பேர் வெளியேற்றப்பட்டனர். 

அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை  மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  கொரோனா விதிமுறைகள் காரணமாக 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 700 காளைகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.   ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள்,100 காளைகள் என நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. மொத்தம் 7 சுற்றுகளில் 568 காளைகள், 300 வீரர்கள் களம் இறங்கினர். 

கொரோனா விதிமுறைகள் காரணமாக உள்ளூரை சேர்ந்த 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை காண அனுமதி வழங்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திய வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

காலை 7.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர்கள் 38 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 24 பேர், பார்வையாளர்கள் 18 பேர் என மொத்தம் 80 பேர் காயம் அடைந்தனர்.  மேலும் போட்டியை வேடிக்கை பார்த்த தவமணி என்பவரின் மகன் பாலமுருகன்(வயது 18) மாடு முட்டி பலியானார். காயம் அடைந்தவர்களில் 21 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 25 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் முதல் இடத்தை பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.  19 காளைகளை அடக்கி 2-வது இடத்தை பிடித்த வலையங்குளம் முருகன் என்பவருக்கு மோட்டார் சைக்கிளும், 11 காளைகளை அடக்கி 3-வது இடத்தை பிடித்த விளாங்குடியை சேர்ந்த பரத்குமார் என்பவருக்கு பசுங்கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான பரிசை மணப்பாறையை சேர்ந்த தேவசகாயம் என்பவரின் காளை பெற்றது. அவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து