முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சானியா இதுவரை வென்ற பரிசுத்தொகை ரூ.52 கோடி

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சானியா இதுவரை வென்ற பரிசுத்தொகை ரூ.52 கோடி

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 35 வயதான மிர்சா, 2005ல் WTA ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார். தற்போது 14-வது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வரும் சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். தனது மற்றும் 3 வயது மகனின் உடல்நிலையை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாக திகழும் சானியா மிர்சா, கடந்த ஆண்டு செப்டம்பரில் இரட்டையர் பிரிவில் 43வது பட்டம் வென்றார். பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தரவுகளின்படி, சானியா மிர்சா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வெற்றிப் பெற்ற மொத்த பரிசுத் தொகை டாலர் மதிப்பில் 7,030,997 (ரூபாய் மதிப்பில் சுமார் 52 கோடி) ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

____________

பிக்பாஷ் லீகில் சாதனை படைத்த மேக்ஸ்வெல் 

பிக்பாஷ் லீக் தொடரின் கடைசி லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபர்ட் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் மெல்போர்ன் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இதனால் அணியின் ரன் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஜோ கிளார்க் 35 ரன்னிலும், நிக் லார்கின் 3 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியை தொடர்ந்தார்.

இறுதியில், மெல்போர்ன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 273 ரன்கள் குவித்தது. இது பிக் பாஷ் லீக்கில் அதிகபட்சமாக எடுக்கப்பட்ட ரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 64 பந்துகளில் 4 சிக்சர், 22 பவுண்டரி உள்பட 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பிக் பாஷ் லீக் தொடரின் தனி ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேக்ஸ்வெல் 41 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இரண்டாவது அதிவேக சதமாகும். 

_____________

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகராவுக்கு கார் பரிசு

கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில், 10 மீட்டர் ஏர்ரைபிள் எஸ்.எச்1 எனும் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அவனி லெகரா, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தப் பிரிவில் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுதந்தவர் என்றப் பெருமையையும், அவனி லெகரா பெற்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில், 10 மீட்டர் ஸ்டாண்டிங் எஸ்.எச்1 துப்பாக்கி சுடுதல் பிரிவில், 249.6 புள்ளிகள் பெற்று புது சாதனையும் படைத்தார்.

இந்நிலையில், விளையாட்டு உள்பட பல துறைகளில் வித்தியாசமாக சாதனை படைக்கும் நபர்களுக்கு, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் கார்களை பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்தவகையில், ஏற்கனவே அறிவித்தப்படி, மாற்றுத் திறனாளிகள் இயக்கும் வகையில் சிறப்பான அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய, மஹிந்திரா எஸ்.யூ.வி.700 கோல்ட் எடிசன் காரை மஹிந்திரா நிறுவனம், வீரமங்கை அவனி லெகராவுக்கு பரிசளித்துள்ளது. இதனை மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

____________

அண்டர் - 19 உலகக் கோப்பை: வீரர்கள் 4 பேருக்கு கொரோனா

மே.இ.தீவுகளில் 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டி நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியையும் வென்றது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், வீரர்களுக்கு ரேபிட்-கொரோனா பரிசோதனையும், அதில் பாஸிட்டிவ் இருந்தால், பிசிஆர் பரிசோதனையும் செய்யப்படும். 

இந்திய வீரர்களுக்கு நேற்றையபோட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆன்ட்டி ரேபிட் பரிசோதனையில் கேப்டன் யாஷ் துல், துணைக் கேப்டன், எஸ்.கே.ரஷீத், கர்நாடக வீரர்அஸ்வின் கவுதம், ஹரியானா வீரர் கர்வ் சங்வான் ஆகியோருக்கு ரேபிட் டெஸ்டில் பாசிட்டிவ் வந்தது. மற்றொரு வீரர் சித்தார்த் என்பவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதியானதால், அடுத்துவரும் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது .இது தவிர கேப்டன் துல், துணைக் கேப்டன் ரஷித், சங்வான், ஆகியோருக்கு ஆர்டிபிஆர் பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. 

________________

சாய்னா பற்றி அவதூறு பேச்சு: நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பே சமரசமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன் என்றார்.

இதற்கு நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.  அதில் அவர் இரட்டை அர்த்தத்துடன் சாய்னா நேவாலை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார் என சர்ச்சை எழுந்தது. சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மராட்டிய காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.  ஜதராபாத் சைபர் கிரைம் போலீசிலும் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இந்த நிலையில், சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து