முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு விருப்ப மனு வழங்கலாம் : அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு உரிய கட்டண தொகையை செலுத்தி அ.தி.மு.க.வினர் விருப்ப மனு வழங்கலாம் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சியின் உடன்பிறப்புகளிடமிருந்து ஏற்கெனவே விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒருசில நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், ஒருசில பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தகைய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ. 5,000, நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 2,500 எனும் கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.  

சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து அதற்கான விருப்ப மனுக்கள் மற்றும் ரசீது புத்தகங்களைப் பெற்றுச் சென்று,  அது சம்பந்தமான விபரங்களை கட்சியின் உடன்பிறப்புகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.  அதே போல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். 

தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரி மனு அளிப்பவர்கள் மட்டுமே, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து