முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் பதிவில் மட்டுமே நெல் கொள்முதல்: உத்தரவை திரும்பப் பெற எடப்பாடி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

ஆன்லைனில் பதிவு செய்யும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும் என அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்றத்திலும், அறிக்கைகளின் மூலமாகவும், பேட்டிகளின் வாயிலாகவும் தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விளைச்சலுக்கு ஏற்றவாறு அதிக அளவில்  திறக்கப்படவில்லை என்று நான் இந்த அரசுக்கு ஏற்கெனவே சுட்டிக் காட்டினேன்.  

மேலும், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மத்திய அரசின் நிதியை காரணம் காட்டி இந்த அரசு இழப்பீடே வழங்காமல் இருந்ததை நான் பொது வெளியில் சுட்டிக்காட்டிய பிறகுதான், இந்த அரசு கடந்த சில நாட்களாக பயிர் இழப்பீடுகளை வழங்கி வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை இறுதியில் பெய்த கனமழையில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 7 லட்சம் ஏக்கர் நெற்கதிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கி வீணானது.

பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டுமென்று அரசை நான் வலியுறுத்தினேன். ஆனால், இந்த அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று வரை ஆய்வு செய்யவில்லை. ஆகவே, உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்.

மேலும் இந்த அரசு ஆன்லைனில் பதிவு செய்யும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளது, இதன்படி கணினி கேட்கும் விவரங்களை விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். பிறகு அப்பதிவுகள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர்கள் இருவரும் ஒப்புதல் அளித்த பிறகுதான் நெல் கொள்முதல் செய்வதற்கான தேதி  விவசாயிக்கு தெரிவிக்கப்படும். இதுபோன்ற தாமதங்களினால் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை சரியான நேரத்தில் அறுவடை செய்ய முடியாமல் பாழாகி, தங்கள் வாழ்வாதாரம் பறிபோய்விடுமோ என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். 

சென்ற ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து, நெற்கதிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இனிவரும் பிப்ரவரி மாத கால இறுதிக்குள் குறைந்தது சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது.  ஆகவே, ஆன்லைன் பதிவை கட்டாயமாக்காமல், ஏற்கெனவே உள்ள எளிய நடைமுறையின்படி, விவசாயிகள் தங்களது உழைப்புக்கு உண்டான பலனை பெறுவதற்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்கவும், தார்ப்பாய், சாக்கு, சணல் போன்ற பொருட்களை அதிகளவில் இருப்பு வைப்பதோடு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவைப்படும் அளவு பணியாட்களை நியமித்து, வியர்வை சிந்தி பாடுபட்ட விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து