முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி., உத்தரகாண்ட், கோவாவில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி: புதிய கருத்து கணிப்பில் தகவல்

சனிக்கிழமை, 29 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

உ.பி., உத்தரகாண்ட், கோவாவில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று புதிய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதே போல் மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ந்தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 3 மாநிலங்களில் பிப்ரவரி 14-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் மற்றும் வீட்டோ நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. இதில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவாவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும் என்றும் பஞ்சாபில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் தெரிய வந்தது.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆனால் இந்த முறை அந்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்றாலும் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

உ.பி.யில் பா.ஜனதா கூட்டணிக்கு 212 முதல் 231 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், சமாஜ்வாடி கட்சிக்கு 147 முதல் 158 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10-ல் இருந்து 16 தொகுதிகளும், காங்கிரசுக்கு 9-ல் இருந்து 15 தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு 2 அல்லது 5 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

உ.பி.யில் அடுத்த முதல்- மந்திரி யார்? என்பதற்கு 52.3 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 36.2 சதவீதம் பேர் அகிலேஷ் யாதவுக்கும், 7.2 சதவீதம் பேர் மாயாவதிக்கும், 3.4 சதவீதம் பேர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பஞ்சாபில் சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இதனால் காங்கிரஸ் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும். கருத்து கணிப்பில் பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. அக்கட்சிக்கு 57 முதல் 60 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 43 முதல் 46 தொகுதிகளும், சிரோன்மணி அகாலி தளம் கட்சி 10 முதல் 13 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு வெறும் 3 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் எனவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

உலக சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் கடற்கரை மாநிலமான கோவாவில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பிரமோத் சவாந்த் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த முறையும் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும் எனவும், அக்கட்சி 20 முதல் 23 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 6 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 6 முதல் 10 இடங்களும், சுயேட்சைகள் 5 முதல் 6 தொகுகளில் வெற்றி பெறும் என்றும் தெரிய வந்துள்ளது.

70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் புஸ்கர்சிங் தாமி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த தேர்தலிலும் பாரதிய ஜனதாவே ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. பா.ஜனதா 42 முதல் 46 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடிக்கும். காங்கிரசுக்கு 12-ல் இருந்து 16 தொகுதிகளும், ஆம்ஆத்மி கட்சிக்கு 8-ல் இருந்து 11 தொகுதிகளும் கிடைக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!