முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் சட்டத்தை ஆதரித்ததற்கு எடப்பாடி மன்னிப்பு கேட்பாரா? காணொலி பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

வேளாண் சட்டத்தை ஆதரித்ததற்கு பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா? என்று நேற்று காணொலி மூலம் பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி முதல்வர்  மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பரப்புரை செய்து வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது, 

கலைஞரின் போராட்ட தழும்பு ஏறிய ஊர்தான் தஞ்சாவூர். மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு 1,000-வது சதய விழா நடத்தியது கலைஞர் தான். தஞ்சை மக்கள் மட்டும் அல்ல, தமிழக மக்களே வியக்கும் வகையில் மகாமக விழாவை சிறப்பாக நடத்தியது தி.மு.க. ஆட்சி. 1992-ல் அ.தி.மு.க. ஆட்சியில் மகாமகம் விழாவில் என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும். 

காவிரி நீர் கடைமடைப்பகுதிக்கு சென்று சேருவதை உறுதி செய்தது நான்தான். காவிரி டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிர்ணயம் செய்யப்பட்டது, தற்போது 4.9 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்துள்ளோம். நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.  பயிர்காப்பீட்டை உரிய முறையில் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.  பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவிரி உரிமையை தமிழ்நாட்டுக்கு பெற்றுக் கொடுத்தது தி.மு.க. ஆட்சி தான். காவிரி உரிமை மீட்பு பயணத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் புதிய நவீன அரிசி ஆலைகள் நிறுவப்படும். கால்நடை தீவண தொழிற்சாலை புதிதாக அமைக்கப்படும். நாகை மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி சாதிக்கும். இலக்கை தாண்டி சாதிப்பதையே அறிஞர் அண்ணாவும், கலைஞரும் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். நான் என்னை உழவன் என்று சொல்லிக்கொண்டது இல்லை, ஆனால் அவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து செயல்பட்டேன், எடப்பாடி போல் வெளிவெஷம் போட்டுக் கொண்டது இல்லை.

இந்திய வேளாண்குடி பெருமக்களுக்கு ஒட்டு மொத்தமாக துரோகம் செய்தவர்தான் பழனிசாமி. பல்லக்குத் தூக்கியாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிய அரசைத் தட்டிக் கேட்கவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அமைதிகாத்த ஒன்றிய அரசை கண்டிக்க கூட முன்வரவில்லை. பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டி போராடியது தி.மு.க. விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. பேராசிரியர் ஜெயராமனை சிறையில் அடைத்தவர் எடப்பாடி பழனிசாமி. 

8 வழிச்சாலை திட்டம் மூலம் விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. வேளாண் சட்டத்தை ஆதரித்ததற்கு பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா?.  உழவர்களின் போராட்டத்துக்கு ஒன்றிய அரசு பணிந்து 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்தது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசு தி.மு.க. அரசு.

வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்தது தி.மு.க. அரசு. ஆகவே நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், கொடுத்த வெற்றியை இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க.விற்கு தாருங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து