முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகார பலம் வெற்றி பெற்றுள்ளது: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

வியாழக்கிழமை, 10 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், படை பலம், அதிகார பலம் வெற்றி பெற்று இருக்கிறது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளி வந்தவுடன் நான் வெளியிட்ட அறிக்கையில், ஆளும் கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது என்றும், தேர்தல் நூறு சதவீதம் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும் என்றும் தெரிவித்திருந்தேன். அது சென்னை ஐகோர்ட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 10-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பழனிசெல்வி மற்றும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஆகியோர் தலா 284 வாக்குகள் பெற்ற நிலையில், குலுக்கல் முறையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் வெற்றி பெற்றதாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, பின்னர் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக மாற்றப்பட்டு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி என்பவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. 

இதனை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் சுயேட்சை வேட்பாளரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் முதல் அமர்வு குலுக்கல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை பார்வையிட்டு விட்டு, முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டிருப்பது நிருபணமாகியுள்ளதாக தெரிவித்ததுடன், தொடர்புடைய தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இதனையடுத்து சென்னை ஐகோர்ட் முன்பு நேரில் ஆஜரான தேர்தல் அதிகாரி, தி.மு.க. வேட்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்ட அரசியல் ரீதியிலான அழுத்தம் காரணமாகவே முடிவை மாற்றி அறிவித்ததாக கூறியிருக்கிறார். தி.மு.க.வினரின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர், தகுந்த ஆதாரத்துடன், சாதுர்யமாக சென்னை ஐகோர்ட்டை அணுகியதன் காரணமாக அவருக்கு நல்லத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த முறைகேடுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.

இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், படை பலம், அதிகார பலம் வெற்றி பெற்று இருக்கிறது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் மக்கள் தக்கப்பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து