முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

வியாழக்கிழமை, 31 மார்ச் 2022      இந்தியா
Stalin-Modi 2022-03-31

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார்.  

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலை டெல்லி பாராளுமன்ற வளாகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்ற நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் அவரை வரவேற்றனர். 

பின்னர், டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.   இந்த சந்திப்பின்போது தமிழகத்துக்கு தேவையான நிதி, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.  

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ அனுமதிக்க வேண்டும், நரிக்குறவர்களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும், சென்னை எழும்பூர் கடற்கரை 4-வது ரயில் பாதை, மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் ஆகியவற்றை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.  டெல்லியில் நாளை 2-ம் தேதி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவிற்கும் பிரதமருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை முதல்வர் சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். 

முன்னதாக, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் சோனியா காந்தி, மு.க. ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது.  நேற்று பகல் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் மு.க. ஸ்டாலினின் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, பாராளுமன்றம் வந்திருந்த ஸ்டாலின், தி.மு.க. அலுவலகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். இரு தலைவர்களும் அங்கு சந்தித்துப் பேசினர். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றது. பிறகு, பாராளுமன்ற மைய மண்டபத்தில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் மு.க. ஸ்டாலின் சந்தித்து உரையாற்றினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!