முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழாவின் 5-ம் நாள்: வடக்குமாசி வீதி ராமாயண சாவடியில் இன்று சுவாமி, அம்மன் எழுந்தருளி அருள் பாலிப்பு

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Meenashi 2022-04-08

Source: provided

மதுரை : சித்திரை திருவிழாவின் 5-ம் நாளான இன்று வடக்குமாசி ராமாயண சாவடியில் சுவாமி, அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கொடியேற்றம் வெகுவிமர்சையாக கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமியும் அம்மனும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.  கொரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்ற விழாவானது இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதியுடன் நடைபெற்ற உள்ளது மதுரை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான நேற்று காலை சித்திரை வீதி, தெற்குமாசிவீதி, சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து மாலையில் அங்கிருந்து பல்லக்கில் புறப்பட்டு இரவு சுவாமியும், அம்மனும் கோவிலை அடைந்தனர். 

இன்று 9-ம் தேதி திருவிழாவின் ஐந்தாம் நாள் காலை சுவாமியும், அம்மனும் வடக்குமாசி வீதி ராமாயண சாவடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்றனர். மாலை குதிரை வாகனங்களில் புறப்பட்டு சுவாமியும், அம்மனும் கோவிலை அடைகின்றனர். 10-ம் தேதி ஆறாம் நாளில் ரிஷப வாகனத்திலும், 11-ம் தேதி ஏழாம்நாள் நந்தீஸ்வரர் யாளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 

தொடர்ந்து 12-ம் தேதி எட்டாம் நாள் திருவிழாவாக பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறு. எட்டு மாதங்கள் ஈசன் ஆட்சி முடிந்து, நான்கு மாத அம்பிகை ஆட்சி தொடங்கும் நிகழ்வாக இது அமையும். பரிவாரங்களுடன் தக்கார் கையில் அம்பிகை செங்கோல் பெற்று இரண்டாம் பிரகார வலம் வருவது காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும்.

வரும் 13-ம் தேதி திருவிழாவின் ஒன்பதாம் நாளில் திக்குவிஜயம் நடக்கிறது. அதை தொடர்ந்து 14-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 15-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து