முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்றுமாவடியில் நடந்த எதிர்சேவை: வைகை ஆற்றில் இன்று தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார் கள்ளழகர் : நீர்வரத்து அதிகரிப்பால் பக்தர்கள் ஆற்றில் இறங்க அனுமதியில்லை

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
kallalagar-2022-04-15

Source: provided

மதுரை : மதுரையை அடுத்த அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது.  இந்த சித்திரை திருவிழா நேற்று முன்தினம் 14-ம் தேதி தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.  நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடானார். முன்னதாக வழியில் உள்ள 456 மண்டகப்படிகளில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

இதைத் தொடர்ந்து நேற்று 15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று உபசரிக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவில் வந்தடையும் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று இரவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றியபடி கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் கள்ளழகர்  தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் வந்தடைகிறார். அதை தொடர்ந்து இன்று 16-ம் தேதி சனிக்கிழமை அதிகாலையில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர் கோரிப்பாளையம் வழியாக மதுரை வைகை ஆற்றை அடைகிறார்.

இன்று அதிகாலை காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அப்போது பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகரை தரிசிப்பர். 

அதை தொடர்ந்து நாளை 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஷேச, கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், தசாவதார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 18-ம் தேதி (திங்கட்கிழமை) மோகன வதாரத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அன்று இரவு பூப்பல்லக்கு அலங்காரமும் நடைபெறுகிறது.

வரும் 19-ம் தேதி (செவ்வாய்க்கிழமை)பூப்பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், 20-ம் தேதி (புதன்கிழமை) அப்பன் திருப்பதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பின்னர் பகல் 1.30 மணியளவில்  கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் அழகர்மலை வந்து சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. 

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வைகை அணையில் இருந்து முதல்கட்டமாக கடந்த 11, 12-ம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு மட்டும் 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இது அடுத்த சில நாட்களில் மதுரை வைகை ஆற்றுக்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. வைகை அணையில் இருந்து மதுரை வைகை ஆற்றுக்கு இது வரை 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

மதுரை வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடக்கும் சமயத்தில் நீர் வரத்து அதிகரித்திருப்பது திகைப்பை ஏற் படுத்தி உள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் கூறுகையில், மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து