முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் இன்று காலை சித்திரை தேரோட்டம்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Kovagam 19-4-2022

Source: provided

கள்ளக்குறிச்சி : கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி இன்று (20-ம்  தேதி) காலை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து உள்ளதால் சித்திரை திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 5-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள், சாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று (19-ம் தேதி) மாலை கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்றது.  இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கோவில் பூசாரியிடம் தாலி கட்டிக் கொண்டனர். 

இதனை தொடர்ந்து கோவில் அருகில் மலை போல் கற்பூரம் ஏற்றி விடிய விடிய கும்மி அடித்து அரவாணின் பெருமைகளை கூறி பாட்டுப்பாடி மகிழ்ந்தனர். இன்று (20-ம்  தேதி) காலை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பந்தலடியில் அரவாண் களப்பலிக்கு பிறகு திருநங்கைகள் கோயில் பூசாரியிடம் கட்டிய தாலியை அறுத்து வெள்ளை புடவை உடுத்திக்கொண்டு சோகத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

நாளை 21-ம் தேதி விடையாத்தியும், 22-ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி ஏராளமான திருநங்கைகள் அங்கு குவிந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து