முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் நிலையத்தில் வாலிபர் மரணமடைந்த வழக்கில்,3 போலீசார் சஸ்பெண்ட்,கொலை வழக்கு பதிவு

வியாழக்கிழமை, 5 மே 2022      தமிழகம்
5 Ram 19

Source: provided

சென்னை:விக்னேஷ் மரணம் தொடர்பாக தலைமை செயலக காலனி சப்இன்ஸ்பெக்டர், காவலர், ஊர்காவல் படை வீரர் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா தலைமை செயலக காலனி போலீசார் கடந்த மாதம் 18-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் பிடிபட்டார். இரவு ரோந்து பணியின்போது விக்னேசை பிடித்த போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது வாலிபர் விக்னேஷ் மரணம் அடைந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்திருக்கிறார் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து விக்னேஷின் மரணத்துக்கு அரசியல் கட்சியினரும் நீதி கேட்டனர். குறிப்பாக இந்த பிரச்சினையை அ.தி.மு.க. சட்டசபையிலும் எழுப்பியது. இந்த நிலையில் விக்னேசின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதுடன் அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியையும் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. விக்னேஷ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய பழங்குடியின ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையத்தில் நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆஜராகி விளக்கம் அளித்தார். கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆஜரானார்கள். போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய பின்னர் பழங்குடியின ஆணைய அதிகாரிகள் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் விக்னேசின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.விக்னேசின் உடலில் இடது கை தோள்பட்டை, முதுகுபகுதி, தொடை, வலது கால் உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. 13 இடங்களில் அடித்ததற்கான அடையாளங்களாக காயங்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. இது இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு வேகமாக நகர்த்தி இருக்கிறது.

விக்னேஷ் மரணம் தொடர்பாக தலைமை செயலக காலனி சப்இன்ஸ்பெக்டர், காவலர், ஊர்காவல் படை வீரர் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது விக்னேஷ் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து சப்இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் மீதும் கொலை வழக்கு பாய்கிறது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. விக்னேஷ் மரணத்தில் பழங்குடியின ஆணையம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆகியோர் ஒரே நேரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதன் மூலம் இதில் தொடர்புடைய போலீசார் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து