முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: வங்கக்கடலில் நாளை புதிய புயல் 'அசானி' உருவாகிறது : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      தமிழகம்
Weather-Center 2021 06-30

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை (மே 8-ம் தேதி) வங்கக்கடலில் புதிய புயல் உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய புயலுக்கு அசானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கத்திரி வெயில்...

தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் வெயில் நீடித்து வருகிறது. இருப்பினும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று முன்தினம் உருவானது. இதன் காரணமாக இப்பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது.

ஆந்திரா- ஒடிசா... 

இது வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வரும் எட்டாம் தேதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, மே 10-ம் தேதி ஆந்திரா- ஒடிசா  கடற்கரையை ஒட்டிய பகுதியில் புயல் மையம் கொள்ளும்.

மழைக்கு வாய்ப்பு...

இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப நிலை... 

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப நிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என்றும் வெப்பநிலை உயர்வால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பில்லை. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

'அசானி' என பெயர்...

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் 8-ஆம் தேதி புயலாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. புயலுக்கு 'அசானி' என பெயரிடப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு சில இடங்களில்...

இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக, சனிக்கிழமையன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலும் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து