முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மஹீத் தீக்‌ஷனா ஏன் முன்னரே அணியில் இடம்பெறவில்லை?

புதன்கிழமை, 11 மே 2022      விளையாட்டு
Maheed-Deekshna 2022 05 11

Source: provided

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் 21 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளாரான மஹீஷ் தீக்‌ஷனா. இலங்கையை சேர்ந்த அவரை 70 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி இருந்தது சி.எஸ்.கே. நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், அண்மையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றை சி.எஸ்.கே அணி நிர்வாகம் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் அவர் சொல்லியுள்ளது இதுதான்.

"அண்டர் 19 போட்டிகள் விளையாடிய காலத்தில் நான் 117 கிலோ எடை இருந்தேன். அதீத உடல் எடை காரணமாக அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. யோ-யோ டெஸ்டில் நான் தேர்ச்சி பெறவில்லை. அதனால் ஆடும் லெவனில் விளையாடும் வீரர்களுக்கு வாட்டர் பாட்டில் கொண்டு சென்று கொடுத்து வரும் பணியை கவனித்தேன். பத்து போட்டிகளுக்கு அந்த பணியை செய்தேன். அது 2017-18 சீசனில் நடந்தது. அப்போது ஒரு நாள் நானொரு முடிவுக்கு வந்தேன். அடுத்த முறை யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றாக வேண்டுமென்பதே எனது முடிவு. கடின முயற்சி செய்தேன். அதன் பலனாக இப்போது இங்கு வந்து நிற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

____________

போர் நமக்கு பெரிய பாடத்தை அளித்திருக்கிறது: ஜெயவர்தனே

இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கையில் ஆட்சி நடத்தி வரும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் மஹிலா ஜெயவர்தனே தனது ட்விட்டர் பக்கத்தில், “இனம், மதம் சார் வெறுப்புகள் மூலம் வரலாற்றில் உள்நாட்டுப் போர் நமக்கு பெரிய பாடத்தை அளித்திருக்கிறது. மேலும் தனிப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. பிரிந்தால் வீழ்வோம்..ஒன்றிணைவோம் வலுவாக நிற்கிறோம். எப்பொழுதும் இலங்கையராகவே சிந்தியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

_____________

ஷகிப் அல் ஹசனுக்கு கொரோனா பாதிப்பு

வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர் ஷகிப் அல் ஹசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால் வருகிற 15-ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

____________

புன்னகையோடு வெளியேற காரணம்? விராட் கோலி பதில்

விராட் கோலி இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில்  216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 3 கோல்டன் டக்-கும் அடங்கும். பெங்களூரு அணி தங்கள் கடைசி போட்டியில் கடந்த 8-ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் முதல் பந்திலே டக் அவுட்டான கோலி புன்னகையோடு வெளியேறினார். பின்னர் ஓய்வறைக்கு சென்ற பிறகும் புன்னகைத்தபடியே  காணப்பட்டார்.இது குறித்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாது. 

இந்த நிலையில் தற்போது விராட் கோலி இது குறித்து பேசியுள்ளார். பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசிய கோலி, "முதல் பந்தில் டக் அவுட்.  என் கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ச்சியாக எனக்கு இது நடந்ததில்லை. இப்போது நான் அனைத்தையும் பார்த்துவிட்டேன் அதனால் தான் சிரித்தேன்." என தெரிவித்தார். தொடர்ந்து கோலி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். 

______________

பெண்கள் உலக குத்துச்சண்டை: அடுத்த சுற்றுக்கு லவ்லினா தகுதி

12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 73 நாடுகளை சேர்ந்த 310 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 70 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், முன்னாள் உலக சாம்பியனான சென் நின் சின்னுடன் (சீன தைபே) மோதினார்.

விறுவிறுப்பான இந்த போட்டியில் முதலில் இருவரும் தற்காப்பு யுக்தியை கையாண்டனர். அதன் பிறகு இருவரும் சரமாரியாக குத்துகளை விட்டனர். முடிவில் அசாமை சேர்ந்த 24 வயதான லவ்லினா 3-2 என்ற கணக்கில் சென் நின் சின்னை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.  கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு லவ்லினா கலந்து கொண்ட முதல் சர்வதேச போட்டி இதுவாகும். கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் லவ்லினா, இங்கிலாந்தின் சின்டி நம்பாவை நாளை மறுநாள் சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து