முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு : அரசு சேவைகள் தொய்வின்றி வழங்க உத்தரவு

புதன்கிழமை, 25 மே 2022      தமிழகம்
CM-4 2022-05-25

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கிண்டி, வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை தாமதமின்றி நிறைவேற்றித் தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று சென்னை, கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு பட்டா, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற  வருவாய்த் துறையின் சேவைகளைப் பெற வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். 

தொடர்ந்து இ-சேவை மையத்திற்குச் சென்ற முதல்வர், அம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் எவ்வளவு நாட்களில் தீர்க்கப்படுகிறது போன்ற விவரங்கள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம்  கேட்டறிந்தார்.  பின்னர், வட்டாட்சியர் அலுவலக வருகைப் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை ஆய்வு செய்த முதல்வர், வட்டாட்சியரிடம், வருகை தந்துள்ள அலுவலர்கள், பணியாளர்கள் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சேவைகள் பெற வந்திருந்த பொதுமக்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்கள் பெற வந்துள்ள சேவைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆய்வு செய்த முதல்வர், பொதுமக்களை எக்காரணம் கொண்டும் அலைக்கழிக்கக் கூடாது என்றும், அவர்களுக்கு உரிய சேவைகளை விரைவாக வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முதலமைச்சரின் தனிப் பிரிவிலிருந்து வந்துள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அரசின் முக்கியமான துறையாக விளங்கும் இதன் சேவை, மக்களுக்கு மிகவும் இன்றியமையாதது. எனவே, பொதுமக்கள் குறிப்பாக மாணவர்களின் கல்விக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பிற அரசு சேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் எந்தவிதத் தொய்வுமின்றி வழங்கிட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இந்நிகழ்வின் போது, அமைச்சர் மா. சுப்பிரமணியன், இணை ஆணையர் (நில நிர்வாகம்) பார்த்திபன், வட்டாட்சியர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து