முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளை கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை அரசு அனுமதிக்காது : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : புன்னகை பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை தமிழக அரசு அனுமதிக்காது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், குழந்தைகள் கால் முளைத்த கவிதைகள், குழந்தைப் பருவம் விளையாடி மகிழும் இனிய பருவம். துள்ளித் திரிந்து, பட்டாம்பூச்சிகளைப் போல சிறகடித்துப் பறந்து மகிழும் குழந்தைப் பருவத்தில், பள்ளிக்குச் சென்று துள்ளி விளையாடவும், கல்வி பயிலவும், உடன் பயிலும் மாணவர்களோடு கதை பேசி களிக்கவும் முடிந்தால்தான் குழந்தைப் பருவம் முற்று பெறும்.

குழந்தைப் பருவத்திலேயே அவர்களை வேலைக்குச் செல்லப் பணித்து, சொற்பத் தொகைக்காக அவர்களின் பொன்னான எதிர்காலத்தை பாழ்படுத்தி  அவர்களின் குழந்தைத்தனத்தைத் திருடுவது ஒரு தீவிர சமூகக் குற்றமாகும். வனத்தில் வளர வேண்டிய தேக்கு மரத்தை தொட்டியில் வளர்ப்பதைப் போல அவர்களது சிறகுகளைக் கத்தரித்து, சுதந்திரத்தைப் பறித்து, குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் அளவற்ற ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலை கல்வியின் மூலமாகவும், மற்றவர்களோடு பழகி கற்றுக்கொள்வதன் மூலமாகவும் முழுமையாக உணரும்போதுதான், மானுடத்திற்கு மகத்தான கடமைகளை ஆற்ற முடியும். குழந்தைத் தொழிலாளர் முறை என்பது அனைத்து வகைகளிலும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கி, அவர்களின் வியர்வையை சுரண்டி சிலர் வளம் பெறுவதற்கு எதிராக விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வோராண்டும் ஜூன் திங்கள் 12-ஆம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பு உரிமை, கல்வி உரிமை, வாழும் உரிமை ஆகிய உரிமைகளைப் பெற்று திறம்பட உயர்ந்து வாழ்க்கையில் வளம் பெற வேண்டும். அந்த உரிமைகளைப் பறிப்பது இயற்கை நியதிக்கு மட்டுமல்ல; சமூக நீதிக்கும் எதிரானதாகும். எனவே, குழந்தைகளை எவ்வகைத் தொழிலிலும் ஊதியத்திற்காக பணியமர்த்தி, அவர்களின் உழைப்பை உறிஞ்சக் கூடாது என்றும், அபாயகரமான தொழிலில் வளரிளம் பருவத்தினரை ஈடுபடுத்தக் கூடாது என்றும் உறுதி ஏற்போம்.

தமிழக அரசு குழந்தைத் தொழிலாளர் முறையை அறவே ஒழிக்க அயராது பாடுபடுகிறது. தகவல் கிடைத்தால் விரைந்து செயல்பட்டு, பணியில் அமர்த்தப்பட்ட குழந்தைகளை மீட்டு, அவர்களது உரிமைகளைப் பேணி, மீண்டும் கல்வியைத் தொடரச் செய்து, தொலைந்து போன குழந்தைப் பருவத்தை மீண்டும் அளித்து, அவர்களை மலரச் செய்கிறது. குழந்தைகளை படிக்க வைப்பது பெற்றோருக்கு ஒருபோதும் பாரமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கட்டணமின்றி புத்தகங்கள், சீருடைகள், பள்ளிக்குச் செல்ல புத்தகப் பை, மதிய உணவில் முட்டையோடு ஊட்டச்சத்து நிறைந்த உணவு, கல்விக்கான உபகரணங்கள், இலவச பேருந்து வசதி என எண்ணற்ற உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும்.  மற்றோர், குழந்தைகளைப் பணிக்கு அமர்த்த மாட்டோம் என்று தீர்மானிக்க வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து எங்கேயாவது ஒரு குழந்தை பணிக்கு அமர்த்தப்பட்டாலும், அரசுக்குத் தகவல் தர வேண்டும். புன்னகை பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை தமிழக அரசு அனுமதிக்காது. இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து