முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் அனைத்து உரிமைகளுக்காக போராடக்கூடிய அரசு தான் தி.மு.க. அரசு : வேலூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
CM-4 2022 06 29

Source: provided

வேலூர் : தமிழகத்தின் அனைத்து உரிமைகளுக்காகவும் போராட கூடிய அரசுதான் தி.மு.க. அரசு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

அனைத்துத் துறைகளும் வளர வேண்டும். அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் வளம்பெற்று பல்வேறு வாய்ப்புகள் பெருக வேண்டும் என்கிற உணர்வோடு பாடுபட்டு கொண்டிருக்கக்கூடிய அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு. அதுதான் இன்றைக்கு ஆட்சிப்பீடத்தில் இருக்கிறது. கடந்த பத்தாண்டு காலத்தில் செய்யத் தவறிய அனைத்துப் பணிகளையும், கடந்த ஓராண்டு காலத்தில் செய்து முடித்திருக்கிறோம். 

இப்படி, அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பணிகளைச் செய்வதன் மூலமாகத்தான், தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலமாக நாம் வளர்த்தெடுக்க முடியும். தமிழகத்தை  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், அண்ணாந்து பார்க்கும் நிலையில் வைத்திருக்கிறோம். தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப, ஒன்றிய அரசும்,  திட்டங்களிலும் நிதியிலும், தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று பிரதமரிடம் ஒரே மேடையில் கோரிக்கை வைத்தேன். உரிமையோடு கேட்டேன்.  நிதி உரிமைகளைக் கேட்பது என்பது, ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்குக் கொண்டு வருவதற்காகத்தான். இந்த மாநிலத்தின் உரிமைகளைப் பெறுவதற்காகதான், எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் போராடும் அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது. 

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு - மேகதாது என்ற புதிய அணையைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது. அதைத் தொடக்கத்தில் இருந்தே நாம் எதிர்த்து, தடுத்து வருகிறோம். ஆனாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கிறபொழுது எல்லாம்,  பொழுது போகவில்லை என்றால், உடனே அதைப் பற்றி தொடங்கி விடுகிறார்கள். அணை கட்ட நிதி ஒதுக்குவது, சட்டம் போடுவது, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, டெல்லிக்குப் படையெடுப்பது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யும்போதெல்லாம், நாமும் அவற்றுக்குத் தடுப்பணை போடும் காரியங்களைச் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம்.எனவே, கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும், ஒன்றிய அரசு தரக் கூடாது என்பதை இந்தக் கூட்டத்தின் வாயிலாகவும் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்படி தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளுக்காகவும், எந்த சமரசங்களுக்கும் இடமில்லாமல் போராடக்கூடிய, வாதாடக்கூடிய அரசு தான் தி.மு.க. அரசு.

ஆளும் கட்சியாக இருக்கும்போதும், தீட்டக்கூடிய திட்டமாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது வைக்கும் கோரிக்கையாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் தமிழ்நாட்டின் அனைத்து மக்களுடைய நலனுக்காக மட்டுமே. அப்படித்தான் தி.மு.க. எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து