முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று அதிகரித்தாலும் தீவிர கட்டுப்பாடுகள் தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
Ma Subramanian 2022 01 10

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால், தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில், முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 50 ஆயிரம் பேருக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. சுமார் 100 செவிலியர் மாணவிகள் லஸ் கார்னர் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், "தமிழக்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 8,970 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சைகளை ஆய்வு செய்து வருகிறோம்.

31-வது தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ளது. தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மட்டுமே நோய் தடுப்பு முறை. மக்கள் தடுப்பூசி முகாமை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வி நிலையங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் கல்வித் துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று அதிகரித்தாலும் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால், தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தமிழகத்தில் மீண்டும் கொரோனோ பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் மாவட்ட நிர்வாகங்களுக்கு கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், " உருமாறிய BA.5 மற்றும் BA2.38 என்ற ஓமிக்ரான் வகை பாதிப்புகள் பெருமளவில் பரவி வருகிறது. இதன் காரணமாக நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். சமீபத்திய ஆய்வில் 26  சதவீதம் சந்தை , பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பொது இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததால் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. 18  சதவீதம் பணிபுரியும் இடங்களிலும் , 16  சதவீதம் பயணத்திலும், 12  சதவீதம் கல்வி நிலையங்கள் வாயிலாகவும் கொரோனோ தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா என்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அலுவலகத்திற்கு வரக்கூடிய அனைவருக்கும் தெர்மல் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுளளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து