முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் வர்ணனைக்கு திரும்பிய ரவி சாஸ்திரி

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      விளையாட்டு
Ravi-Shastri 2022 07 01

Source: provided

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. முன்னாள் வீரராக அறியப்பட்ட ரவி சாஸ்திரி பல ஆண்டுகளாக வர்ணனையாளராகவும் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். கிரிக்கெட் ஒளிபரப்புக்கு அவருடைய வர்ணனை பெரிய பலமாக இருந்தது. எனினும் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆன பிறகு அவரால் அந்தப் பணியில் ஈடுபட முடியாமல் போனது. பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பிறகு ஐபிஎல் 2022 போட்டியில் வர்ணனைக் குழுவில் இடம்பெற்றிருந்தாலும் இறுதிச்சுற்றில் மட்டுமே ஆங்கில வர்ணனையில் ஈடுபட்டார். 

இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்டில் வர்ணனை செய்து வருகிறார் ரவி சாஸ்திரி. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி விளையாடும் சர்வதேச ஆட்டங்களில் வர்ணனை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. முக்கியமான இந்த டெஸ்டில் ரவி சாஸ்திரி வர்ணனையாளராகப் பணிபுரிவதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

________________

இங்கிலாந்து அணிக்கு ஜாஸ் பட்லர் கேப்டன் 

இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாகப் பிரபல வீரர் ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கி கோப்பையை வென்ற இயன் மார்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகச் சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பேட்டரான ஜாஸ் பட்லர், இங்கிலாந்து ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்காக 9 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் அவர் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். கேப்டனாக அறிவிக்கப்பட்ட பட்லர், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் தனது புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் மேத்யூ மாட் நியமிக்கப்பட்டார். 

_________________

ஒரு வருடத்தில் இந்திய அணிக்கு 8 கேப்டன்கள்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டுக்கு இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.  இதையடுத்து கடந்த ஜூலை முதல் இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் 8-வது கேப்டன் ஆகிறார் பும்ரா. ஜூலை 2021 முதல் ஷிகர் தவன், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், பாண்டியா, பும்ரா ஆகியோர் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்கள்.

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து இந்திய அணியில் கேப்டன்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியிருக்கிறது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு இந்தியாவின் 8-வது கேப்டனாக உள்ளார் பும்ரா. கேப்டன்களின் எண்ணிக்கை அதிகமாகக் காரணம்? கோலிக்கு அடுத்ததாக இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். எனினும் ஓய்வு, காயம், கொரோனா எனப் பல்வேறு காரணங்களால் ரோஹித் சர்மாவால் சில தொடர்களில் இடம்பெற முடியவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் புதிய கேப்டன்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. 

___________________

இலங்கை எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. காலேவில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் எடுத்து 109 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்திருந்த ஆஸி. அணி, நேற்று மீதமுள்ள 2 விக்கெட்டுகளை இழந்தது. 

2-வது இன்னிங்ஸிலும் தடுமாறிய இலங்கை அணி 22.5 ஓவர்களில் 113 ரன்களுக்குச் சுருண்டது. லயன், ஸ்வெப்சன், டிராவிஸ் ஹெட் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் அற்புதமாகப் பந்துவீசினார்கள். 2-வது இன்னிங்ஸில் 5 ரன்கள் இலக்கை 0.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. ரமேஷ் மெண்டிஸ் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார் வார்னர். முதல்முறையாக இலங்கையில் விளையாடிய டெஸ்டில் 2-வதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது ஆஸி. அணி. இதற்கு முன்பு வெற்றி பெற்ற ஏழு முறையும் முதலில் பேட்டிங் செய்தது.  கேம்ரூன் கிரீன் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.  2-வது மற்றும் கடைசி டெஸ்ட், காலேவில் ஜூலை 8 அன்று தொடங்குகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!