முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்காலில் காலரா தொற்று: இன்று முதல் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      தமிழகம்
Karaikal 2022 07 03

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரித்து வந்தது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீ ராமுலு நேற்று 2-ம் முறையாக காரைக்காலில் மருத்துவ குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார்.  இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

காரைக்கால் மாவட்டத்தில் சமீபகாலமாக கடுமையான வயிற்றுப்போக்கு நோய்தொற்று அதிகளவில் பதிவாகி வருகின்றன. மேலும் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.  மேலும், தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த சுகாதாரக் குழுவின் ஒருங்கிணைப்புடனும், நகராட்சி, பொதுப்பணித்துறை போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடனும் அனைத்து மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.   பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கவும். சாப்பிடும் முன், கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும். சரியாகக் கழுவி சமைத்த உணவை உட்கொள்ளவும். பாதுகாப்பான கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்தவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும். வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வாந்தி எடுத்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

ஓ.ஆர்.எஸ். கரைசலின் முக்கியத்துவம் குறித்து அறிந்து, வீட்டிலேயே ஓ.ஆர்.எஸ். தீர்வை உருவாக்க கற்றுக் கொள்ளுங்கள். இது நோயின் தீவிரத்தை தடுக்க உள்ளூர் நல்வழித்துறை குழு மற்றும் சுகாதார குழு உதவும். அக்கம்பக்கத்தினர், மூத்த குடிமக்கள் யாராவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நேய்களால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலரா பரவல் எதிரொலியாக இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உள்ளதால் கல்வி நிலையங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து