முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் காசி யாத்திரை ரயில் மதுரையில் இருந்து வரும் 23-ம் தேதி இயக்கம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      தமிழகம்
Madurai-train 2022-07-05

Source: provided

மதுரை : பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், 2-வது தனியார் ரயில் (திவ்ய காசி-ஆடி அமாவாசை) காசி யாத்திரை ரயில் வரும் 23-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது.

உள்ளூர் சுற்றுலாக்களை மேம்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்த திட்டம் பாரத் கவுரவ் திட்டம். இத்திட்டத்தின் கீழ் முதல் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து ஷீரடிக்கு இயக்கப்பட்டது. 

இதையடுத்து, பாரத் கவுரவ் திட்டத்தில் 2-வது ரயில் சேவையை டிராவல் டைம்ஸ் நிறுவனம் வழங்க உள்ளது. இந்த நிறுவனம், ரயில்வேயின் பங்குதாராக இணைந்து, உலா ரயில் என்ற பெயரில் சிறப்பு யாத்திரை ரயிலை இயக்க உள்ளது. 

இந்த ரயில், திவ்ய காசி-ஆடி அமாவாசை காசி யாத்திரை என்ற பெயரில் மதுரையில் இருந்து வரும் 23-ம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் மற்றும் விஜயவாடாவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. 

ஆந்திராவின் பீதாம்புரத்தில் புருகுதிகா தேவி, பூரி பிமலா தேவி, ஜஜ்பூரில் பிரஜா தேவி, கொல்கத்தா காளி, கயாவில் மங்கள கெளரி, காசி விசாலாட்சி, பிரயாக்ராஜ் அலோப்தேவி ஆகிய 7 சக்தி பீடங்களுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். 

இதன் பிறகு பாதகயா, நாபி கயாவில் சிரார்த்தம், சிரோ கயாவில் ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு பிண்ட பிரதானம் தந்து பூஜை செய்தல் உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.  இந்த ரயிலில் 700 பேர் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 நாட்கள் சுற்று பயணத்துக்கு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் பயணிக்க (பட்ஜெட் வகுப்பு) ரூ.21,500-ல் இருந்து கட்டணம் தொடங்குகிறது. ஸ்டாண்டர்ட் சிலிப்பர் (தூங்கும் வசதி) வகுப்பில் ரூ.23,600 முதல் ரூ.30,600 வரையும், கம்போர்ட் மூன்றடுக்கு ஏசி வகுப்பில் ரூ.31,400 முதல் ரூ.40,500 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உலா ரயில் என்ற சிறப்பு யாத்திரை ரயில் சேவை சென்னையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா அமைச்சக தென் மண்டல இயக்குநர் முகமது பரூக், தெற்கு ரயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து